இளமையை தக்க வைக்கும் மருந்துகள் குறித்து கனடா சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
உடல் எடையைக் குறைக்கவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் இளமையைத் தக்கவைக்கவும் உதவும் என்ற பெயரில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத ‘பெப்டைட்’ (Peptide) ஊசி மருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கனடா சுகாதாரத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய மருந்துகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடாவைப் பொறுத்தவரை, பெப்டைட் மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாகும்.

ஆனால், தற்போது இணையதளம் வாயிலாக முறையான அனுமதியின்றி விற்கப்படும் இந்த மருந்துகள் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, இரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவை தரம் குறைந்த முறையில் தயாரிக்கப்படுவதால் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கனடிய சுகாதாரத் திணைக்களம் இதுவரை பறிமுதல் செய்துள்ள சில முக்கிய பெப்டைட் மருந்துகளின் பட்டியல்: • BPC-157 • CJC-1295 • HGH / HGH Fragment • Melanotan I and II • Retatrutide • TB-500 (Thymosin-β4)
"ஆராய்ச்சிப் பயன்பாட்டிற்கு மட்டுமே" (For research use only) என்ற லேபிளுடன் விற்கப்படும் மருந்துகள் சட்டப்பூர்வமானவை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள அதிகாரிகள், உரிமம் பெற்ற மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரைப்படி கிடைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கனடாவில் அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் லேபிளில் 8 இலக்க மருந்து அடையாள எண் (DIN) அச்சிடப்பட்டிருக்கும். இத்தகைய அங்கீகரிக்கப்படாத மருந்துகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக கனடிய சுகாதார திணைக்களம் தரிவித்துள்ளது.
ஒருவேளை யாராவது இம்மருந்துகளைப் பயன்படுத்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.