மெக்சிக்கோவில் கனமழை ; 41 பேர் பலி
மெக்சிக்கோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 59 வைத்தியசாலைகள், மற்றும் 308 பாடசாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களை மீட்பதற்கும், சேதமடைந்த பகுதிகளில் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுமார் 8,700 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில், சில மலைப்பகுதிகளில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என்றும், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.