நியூசிலாந்தில் கடும் மழை ; மண்சரிவில் சிக்கி பலர் மாயம்
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் வியாழக்கிழமை (ஜன 22) பெய்த கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர்.
பிளெண்டி வளைக்குடா பிராந்தியத்தில் உள்ள மவுண்ட் மவுங்கானுய் (Mount Maunganui) பகுதியில் உள்ள ஒரு முகாமில் (campsite) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் (single figures) இருப்பதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதில் சிறுவர்களும் அடங்குவர் என அஞ்சப்படுகிறது. ஹெலிகொப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளுக்குள் இருந்து குரல்கள் கேட்டதாக முதற்கட்ட மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். ஆனால் நிலம் மீண்டும் சரியும் அபாயம் இருப்பதால் பணிகள் சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். வார்க்வொர்த் (Warkworth) பகுதியில் வெள்ள நீரில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. நார்த்லாண்ட், வைகாடோ மற்றும் பே ஆஃப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon), நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவசரகால முகாமைத்துவ அமைச்சர் மார்க் மிட்செல், மீட்புக் குழுவினர் விரைவாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடக்குத் தீவில் நிலவி வந்த கடும் வானிலை எச்சரிக்கைகளை மெட்சர்வீஸ் (MetService) விலக்கிக் கொண்டுள்ளது.
இருப்பினும், தெற்குத் தீவில் சில பகுதிகளில் மழை தொடரக்கூடும் எனவும், அதுவும் வியாழக்கிழமைக்குள் குறையும் எனவம் எதிர்பார்க்கப்படுகிறது.