டொரோண்டோவில் பனிப்பொழிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் டொரோண்டோ நகரமும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளும் திங்கள்கிழமை காலை வரை 10 செ.மீ வரை பனிப்பொழிவை எதிர்கொள்ளக்கூடும் என கனடாவின் தேசிய வானிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பர்லிங்டன், ஓக்வில்லே, காலெடன், டொராண்டோ நகரம், ஹால்டன் ஹில்ஸ்–மில்டன், மிசிசாகா–பிராம்ப்டன், நியூமார்க்கெட்–ஜார்ஜினா–வடக்கு யார்க் பிராந்தியம், பிக்கரிங்–ஓஷாவா–தெற்கு டர்ஹாம் பிராந்தியம், உக்ஸ்பிரிட்ஜ்–பீவர்டன்–வடக்கு டர்ஹாம் பிராந்தியம் மற்றும் வாகன்–ரிச்மண்ட் ஹில்–மார்க்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் நிற பனிப்பொழிவு எச்சரிக்கையை வெளியிட்டது.
அதிக பனிப்பொழிவு நேரங்களில் பார்வைத் தெளிவு குறையக்கூடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பனிப்பொழிவு திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி பிற்பகல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனியின் அளவு மிக அதிகமாக இல்லாவிட்டாலும், அதன் நேரம் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். விடுமுறை காலம் முடிவடைந்துள்ளதால், போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், திங்கள்கிழமை காலை பயணத்திற்கு இந்த பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணம் சவாலானதாக இருக்கலாம். பனி தேங்குவதால் சாலைகள் மற்றும் நடைபாதைகள் வழுக்கலாக இருக்கும். காலை நேர போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாலையில் செல்ல கூடுதல் நேரம் ஒதுக்கி பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.