கனடாவில் டீசல் விலை உயர்வு: தொழில்துறைகள் பாதிப்பு
கனடா முழுவதும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதால், விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரங்கள் கட்டுக்கடங்காத செலவினங்களைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், ஆல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்று வரும் விசித்திரமான எரிபொருள் திருட்டுகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
காஸ்படி அமைப்பின் பெட்ரோலிய பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர் பேட்ரிக் டி ஹான் கூறுகையில், "கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசல் 1.86 டொலராக இருந்த நிலையில், அண்மைய வாரங்களில் 2.65 டொலர் வரை உயர்ந்துள்ளது.

தற்போது 2.60 டொலருக்கு சற்று கீழே குறைந்திருந்தாலும், கனடா முழுவதும் இது இன்னும் வரலாற்றுச் சாதனை அளவிலேயே உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிலையங்களோடு நிற்காமல், நாட்டின் அனைத்து வணிகத் துறைகளிலும் டீசல் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்கரியை தளமாகக் கொண்ட 'எல்லி பியான்கா' தோல் பராமரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான எவெலின் நியாய்ரோ, இந்த விலை உயர்வு தங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்:
பொருட்கள் வருகை, பேக்கேஜிங் மற்றும் லேபிள்கள் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கும் கூரியர் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் இரட்டிப்பாகியுள்ளன.
வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களின் விலையை உயர்த்த விரும்பாததால், செலவுகளைக் கட்டுப்படுத்தப் பணியாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயம், சரக்கு லாரிகள் மற்றும் இரயில்கள் அனைத்தும் டீசலையே நம்பியுள்ளதால், நேரடியாக டீசல் வாங்காத சராசரி நுகர்வோரும் மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் வழியாக இந்த விலை உயர்வின் தாக்கத்தைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
விலை உயர்வு ஒருபுறம் இருக்க, ஆல்பர்ட்டாவில் நிலத்தடி தொட்டிகளிலிருந்தே நேரடியாக டீசல் திருடப்படும் விசித்திரமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
எரிபொருள் நிலையங்களின் தளத்திற்குக் கீழே உள்ள நிலத்தடி சேமிப்புத் தொட்டிகளிலிருந்து நேரடியாக டீசலை உறிஞ்சி திருடுவது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என கல்கரி காவல்துறை தெரிவித்துள்ளது.