பங்களாதேசத்தில் மீண்டும் பதற்றம் ; ஹிந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
பங்களாதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில், அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது அதிகளவில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், ஹிந்து இளைஞரான திப்பு சந்திர தாஸ், மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு பலர் முன்னிலையில் உடல் எரிக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியது.

அதைத் தொடர்ந்து பங்களாதேசத்தின் மைமென்சிங்கின் பாலுகா உபாசிலா பகுதியில் பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் மதங்களுக்கு இடையேயான பாகுபாடு, வன்முறை, ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவு என சிறுபான்மையினர் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிா்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பங்களாதேசத்தின் தமுத்யாவில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர்கள் வெட்டப்பட்டு, பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் தாக்கப்படுவது இது நான்காவது முறை.
கோகோன் சந்திர தாஸ் என அடையாளம் காணப்பட்ட அவர் 50 வயது ஹிந்து தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் தமுத்யாவின் கீர்பங்கா பஜார் அருகே நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ காயத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சந்திர தாஸ் மேல் சிகிச்சைக்காக தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திலாய் கிராமத்தில் வசிக்கும் கோகோன் சந்திர தாஸ், கீர்பங்கா பஜாரில் மருந்து மற்றும் மொபைல் கடை நடத்தி வருவதாகவும், புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு ஆட்டோவில் தனது வீட்டிற்கு சென்றிகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சந்திர தாஸின் மனைவி சிமா தாஸ் கூறுகையில், “என் கணவரில் தலை, முகத்தில் கத்தியால் வெட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
அவருக்கு எதிரி யாரும் இல்லை. ஏன் தாக்கினார்கள் என்றும் தெரியவில்லை” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.