பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தப்பட்டு மதம் மாற்றி வயதானவருடன் கட்டாய திருமணம்!
பாகிஸ்தானில் இந்து பெண் மதம் கட்டாய மாற்றப்பட்டு வயதானவருடன் திருமணம் செய்து வைய்யக முயன்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் உள்ள மிர்புகாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் சுனிதா குமாரி. இந்து மதத்தை சேர்ந்தவரான சுனிதா குமாரி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சுனிதாவை கடத்தியவர்கள், அவரை ஒரு வயதான நபருக்கு திருமணம் செய்துவைக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், சுனிதா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வயதான நபருடன் திருமணம்
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இளம்பெண் சுனிதா குமாரி, உமர்கோட் என்ற பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. இதற்கிடையில், சுனிதாவை மீட்பதற்காக அப்பகுதியை சேர்ந்த இந்து மத அமைப்பினர், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக உமர்கோட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர் சந்தர் கோலி என்பவர் சுனிதாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் சுனிதா குமாரியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சுனிதா குமாரி சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் சந்தர் கோலி கூறுகையில்,
“இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இதுபோல் இந்து பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும், அவர்களுக்கு கட்டாய திருமணங்கள் செய்து வைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதில் சுனிதா குமாரி போல் ஒரு சில பெண்கள் மட்டுமே சட்டப் போராட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். பல நேரங்களில், பெண்களை கடத்தியவர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து கோர்ட்டில் சமர்ப்பித்து விடுகின்றனர்.
சம்பந்தப்பட்ட பெண்கள் தங்கள் விருப்பத்துடனேயே மதம் மாறியதாகவும், அவர்களின் சம்மதத்துடனேயே திருமணம் நடைபெற்றதாகவும் நிரூபித்துவிடுகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதால், அவர்களால் வழக்குகளை எதிர்கொள்ள முடிவதில்லை என்றும் வழக்கறிஞர் சந்தர் கோலி தெரிவித்துள்ளார்.