மனைவி, மகன் கண்முன்னே இந்தியரின் தலையை துண்டித்துக் கொன்ற ஆசாமி ; அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் ஹோட்டல் விடுதி ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹோட்டலில் பணியாற்றிய கோபோஸ் மார்டினெஸ் தனது பெண் சக ஊழியருடன் மோட்டலில் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்திரமௌலி அங்கு சென்றார்.ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கொலை வழக்கு
இருப்பினும், சந்திரமௌலி இதைப் பற்றி கோபோஸிடம் நேரடியாகச் சொல்லாமல், அருகில் இருந்த பெண் ஊழியரிடம் சொன்னபோது, கோபோஸ் மிகவும் கோபமடைந்தார். சந்திரமௌலி தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்த கோபோஸ் கத்தி ஒன்றை எடுத்து வந்து சந்திரமௌலியைத் தாக்கினார்.
உயிருக்கு பயந்து சந்திரமௌலி மோட்டல் பார்க்கிங் இடத்திற்குள் ஓடினார். இருப்பினும் கோபோஸ் அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கினார். அலறல் சத்தம் கேட்டு, முன்னறையில் இருந்த சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் கோபோஸ் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சந்திரமௌலியின் தலையை துண்டித்தார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரமௌலியை கத்தியால் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.