அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: இந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெப்பீல்ட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 76 வயதான பிரவீன் ராவோஜிபாய் பட்டேல் என்ற நபர் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஷெப்பீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வில்லியம் ஜெரி மூர்(வயது 34) என்ற நபர், தங்குவதற்கு ஒரு அறை தேடி பிரவீன் பட்டேலின் ஓட்டலுக்கு வந்துள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, வில்லியம் ஜெரி, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து பிரவீன் பட்டேல் மீது இரண்டு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரவீன் பட்டேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஷெப்பீல்ட் பொலிஸார், குற்றவாளி வில்லியம் ஜெரியை கைது செய்தனர்.
மேலும் கொலை செய்வதற்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள 'ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.