இத்தாலி நீதிமன்றில் குழாய் தண்ணீா் தொடர்பில் விதிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு!
இத்தாலி ஹோட்டல்களில் குழாய் தண்ணீர் வழங்குவது கட்டாயமில்லை என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு சுற்றுலாப் பயணி விடுத்த சவாலும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது.
கடந்த 2020 புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக, இத்தாலியின் புகழ்பெற்ற 'டோலோமைட்ஸ்' பனிச்சறுக்கு ரிசார்ட்டில் உள்ள 'ஹோட்டல் சாசோங்கர்' என்ற ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் பெண் சுற்றுலாப் பயணியொருவர் தங்கியுள்ளார்.

அங்கு அவர் உணவு சாப்பிடும்போது, குடிக்கக் குழாய் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், அந்த ஆடம்பர ஹோட்டல் நிர்வாகமோ, "இலவசமாகத் தண்ணீர் தர முடியாது; வேண்டும் என்றால் ஒரு பாட்டில் 7 யூரோ கொடுத்து மினரல் வாட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என கடுந்தொனியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாட்டில் தண்ணீருக்கு இவ்வளவு தொகையா என அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தண்ணீர் என்பது இயற்கையின் கொடை, அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை! மனிதனின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்யக் குறைந்தபட்ச தண்ணீரையாவது இலவசமாக வழங்க வேண்டும்" என்று தனது மனுவில் வாதிட்ட அவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 2,700 யூரோவிற்கும் மேல் நஷ்டஈடு கோரினார்.
ஏற்கனவே இரண்டு கீழ் நீதிமன்றங்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்த நிலையில், இந்த வழக்கு இத்தாலியின் மிக உயர்ந்த நீதிமன்றமான 'கோர்ட் ஆஃப் காசேஷன்' வரை சென்றது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் இறுதியில் வழங்கிய தீர்ப்பில்: "இத்தாலிய சட்டப்படி, பார்கள் அல்லது உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் குழாய் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை" என்று கூறி ஹோட்டலுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும், உணவகங்களில் கேட்கும்போதெல்லாம் இலவசக் குழாய் தண்ணீர் வழங்க வேண்டும் என்று எந்த ஒரு பொதுவான சட்டமும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 'குடிநீர் வழிகாட்டுதல்' ஹோட்டல்களை அவ்வாறு வழங்குமாறு ஊக்குவிக்கிறதே தவிர, அதை ஒரு கட்டாய விதியாக மாற்றவில்லை. இந்தத் தீர்ப்பு குறித்து ஹோட்டல் நிர்வாகமும், அந்தப் பெண்ணின் வழக்கறிஞரும் தற்போதைக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.