கனேடிய மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்: பள்ளியில் 182 எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Cranbrook பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பள்ளியில் 182 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இது மூன்றாவது முறையாக முன்னாள் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுகிறது.
குறித்த தகவல்களை உறுதி செய்துள்ள அதிகாரிகள், Cranbrook பகுதியில் அமைந்துள்ள புனித யூஜின் மிஷன் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து 182 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
சில கல்லறைகள் 3 அல்லது 4 அடி ஆழத்தில் மட்டுமே காணப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புனித யூஜின் மிஷன் உண்டுறை பள்ளியானது 1910 முதல் 1970 வரையிலான 60 ஆண்டு காலம் செயல்பட்டு வந்துள்ளது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் குறித்த பள்ளியின் சேவையை பெற்றுள்ளனர். கடந்த 2000 ஆண்டு முதல் புனித யூஜின் ரிசார்ட் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது.
முன்னதாக, கம்லூப்ஸ் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து 215 கல்லறைகளும், மேரிவல் உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து 751 கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கனேடிய மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.