மனித கடத்தல் முறைப்பாடு ; 276 ஆசிய நாட்டவரை திருப்பியனுப்பிய பிரான்ஸ்!
மனித கடத்தல் முறைப்பாடு காரணமாக பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 இந்தியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மும்பையைச் சென்றடைந்துள்ளனர். எனினும் அவர்களில் , 27 பேர் பிரான்ஸில் தங்க அனுமதி கோரி உள்ளனர்.
லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிக்கரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. பறந்துகொண்டிருந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரிவிமான நிலையத்தில் தரையிறங்கிஉள்ளது.
மனித கடத்தல் நடப்பதாக தகவல்
இந்நிலையில் அந்த விமானத்தில் மனித கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தை தடுத்து நிறுத்தி பயணிகளை விமான நிலையத்தில் தங்க வைத்தனர்.
பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும் பயணிகளிடம் நீதித்துறை விசாரணை நடைபெற்றது. இதில், பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமானத்தை புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில் நேற்று முன்தினம் வாட்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு மும்பையை சென்றடைந்துள்ளது. இதில் 276 பயணிகள் மட்டுமே சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாவர்.
5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. அதேவேளை சர்வதேச சட்டப்படி, அடைக்கலம் கோருவோரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.மேலும் ஆட்களை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய 2 பேர் பிரான்ஸிலேயே உள்ளனர்.
இந்த விமானத்தில் மும்பை வந்த பயணிகள் காலை 8.30 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் சென்ற அவர்கள் தங்கள் முகத்தை மூடியபடியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தங்கள் பயணம்குறித்த தகவலை ஊடகங்களிடம் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள், மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா சென்று அங்கிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைவதுண்டு. இந்நிலையில் தான் நிக்கரகுவா சென்ற விமானம் பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.