காசாவில் மனிதாபிமான பரிமாற்றம் ; ஹமாஸ் ஒப்படைத்த இரு பணயக்கைதிகள்
இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலும் இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 48 பணயக்கைதிகளையும் ஹமாஸ் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளும், 9 பணயக்கைதிகளின் உடலங்களும் இதுவரை இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்ட நான்கு உடலங்களில் ஒன்று, எந்தப் பணயக்கைதிகளுடன் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் அனுப்புவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
பணயக் கைதிகளின் உடலங்கள் அனைத்தையும் ஹமாஸ் இதுவரை ஒப்படைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.