கிரீஸில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து; அந்தரித்த ஆயிரக்கணக்கான பயணிகள்!
கிரீஸில் நாட்டில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் நேற்று (4) பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏதென்ஸ் விமானப் போக்குவரத்து தகவல் தொடர்பு மையத்தில் ரேடியோ அலைவரிசை அமைப்பில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

சில மணிநேரங்களுக்குப் பின் விமானசேவைகள்
இதன் காரணமாக கிரீஸ் நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகளைப் பெறுவதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். எனினும், சில மணிநேரங்களுக்குப் பின்னர் படிப்படியாக சில விமானசேவைகள் இயங்கியதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய செயற்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இருப்பினும், கிரீஸ் வான்வழியாக செல்லும் சில சர்வதேச விமானங்கள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று ஏற்பட்ட மின் தடை முதலான கோளாறுகளுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இருப்பினும், காலாவதியான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டமை இத்தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
புத்தாண்டு தொடங்கிய பின்னர், வரக்கூடிய முதல் திங்கட்கிழமையான இன்று (5) பலர் விடுமுறையை நிறைவு செய்துகொண்டு தொழிலுக்கு திரும்புவதற்காக விமானங்களில் பயணிக்கவிருந்த நிலையிலேயே கோளாறு ஏற்பட்டு விமானங்கள் முடங்கியதால் விமான பயணிகள் பெரும் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.