கனடாவில் ஹூண்டாய் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் 2026 ஆம் ஆண்டு மாடல் ஹூண்டாய் பாலிசேட் (Hyundai Palisade) ரக வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் மற்றும் போக்குவரத்துத் துறை அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்த வாகனங்களின் மூன்றாவது வரிசை இருக்கை பட்டி (Seatbelt) அமைப்பில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விபத்து நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மோட்டார் வாகனப் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, இந்த ரகக் கார்களில் மூன்றாவது வரிசையின் இடதுபுற இருக்கை பட்டியில் உள்ள மின் இணைப்புக் கம்பிகள் (Wiring) எளிதில் சேதமடையும் நிலையில் உள்ளன.

இருக்கை பட்டியை இழுக்கும்போது இந்தக் கம்பிகள் பாதிப்படைவதால், ஒருவர் பட்டி அணியாத நிலையிலும், அவர் அணிந்திருப்பதாக வாகனத்தின் திரையில் தவறான தகவல் (Seatbelt Indicator) காண்பிக்கப்படும்.
தவறான இருக்கை பட்டி குறியீடு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, விபத்து ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்குப் பலத்த காயம் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் சுமார் 4,203 வாகனங்கள் இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் நேரடியாகத் தகவல் தெரிவிக்கும். அவர்கள் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களுக்குச் (Dealership) சென்று, இந்த மின் இணைப்புப் பிரச்சினையை இலவசமாகச் சரிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.