நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இந்திய தூதர்
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இரு நாடுகளின் உறவில் விரிசல்
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்ததை அடுத்து, . கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
அதோடு இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நீடித்து வருகின்றது. இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ,
நிஜ்ஜார் கொலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத்துறை தெரிவித்த தகவலின் படியே அந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.
இதை அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா, கனடா இடையிலான உறவை அவர் தகர்த்துள்ளார். நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.