ஒன்ராறியோ முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து 205,000 மாயம்
ஒன்ராறியோ மாகாணத்தின் லண்டன் நகரைச் சேர்ந்த 80 வயதான டான் ஜாக்சன் என்பவரின் டி.டி வங்கிக் கணக்கிலிருந்து எட்டு மாத காலப்பகுதியில் எவ்வித விளக்கமும் இன்றி 200,000-க்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் தனது மனைவி சாராவே வங்கி நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததாகவும், அவர் காலமான பிறகு குடும்பத்தினரின் உதவியுடன் தானே வங்கிக் கணக்கைக் கையாளத் தொடங்கியதாகவும் ஜாக்சன் நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இணையவழி வங்கிச் சேவைகள் குறித்துத் தனக்குப் போதிய பரிச்சயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விடுமுறை முடிந்து திரும்பியபோது தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயமாகத் தொடங்கியதை ஜாக்சன் கவனித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் கணக்கிலிருந்து பணம் குறைந்ததை முதலில் கண்டறிந்தோம் என அவரது மகள் டெனிஸ் தெரிவித்துள்ளார்.
வசந்த காலத்தில் அவரது கடன் வரம்பிலிருந்து 75,000 டொலர் காணாமல் போனது எனவும் கோடைக்காலத்தில் ஒரே நேரத்தில் 34,000 டொலர் மற்றும் தலா 29,000 டொலர் வீதம் இருமுறை என மொத்தமாக 205,000 டொலர் எடுக்கப்பட்டுள்ளது.
"எவ்விதப் பாதுகாப்புச் சரிபார்ப்புகளும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு மாற்ற முடியும்? எனது தந்தைக்கு இணையத்தைப் பயன்படுத்தவே தெரியாது" என டெனிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து காவல்துறையிலும் வங்கியின் மோசடிப் பிரிவிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இழப்பீடு கோரிய தங்களது விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டதாகவும், வங்கி அதிகாரிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது தந்தையையோ குற்றம் சாட்டுவதாகவும் டெனிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொல், பின் (PIN) மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை மூன்றாம் நபர்களுடன் பகிராமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு எனவும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தனது பணம் எங்கே போனது என்பதைக் கண்டறிந்து, அதனை மீட்டுத் தர யாராவது உதவ வேண்டும் என 80 வயதான டான் ஜாக்சன் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.