10,000 ரோஹிங்கியா மக்களைக் கொன்ற மியான்மர் படைகள் ; சர்வதேச நீதிமன்றம் அதிரடி
முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று (19) தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இனப்படுகொலை
கடந்த 2017-ஆம் ஆண்டு மியான்மரின் ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
லட்சக்கணக்கானோர் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து 2019-ஆம் ஆண்டு காம்பியா அரசு தொடர்ந்த வழக்கில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா மற்றும் நவி பிள்ளை உள்ளிட்ட 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 9-6 என்ற பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
10,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் கொடூர வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தாயகம் திரும்ப மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாட்டின் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.