ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படாவிடின் அமெரிக்காவிற்குப் பாரிய தோல்வி
ஈரானின் தற்போதைய ஆட்சி முறையை முழுமையாக மாற்றியமைக்கத் தவறினால், அது அமெரிக்காவிற்கு ஒரு தோல்வியாகவே அமையும் என செயின்ட் எண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் மூலோபாய ஆய்வுகளுக்கான பேராசிரியர் பிலிப்ஸ் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மோதல்களின் முடிவில், ஈரானில் இப்போதிருக்கும் அதே ஆட்சி தொடருமானால், அது அமெரிக்காவின் தோல்வியாகவே கருதப்படும் என அவர் அல் ஜசீரா ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலுக்குப் பிறகு தற்போதைய ஈரான் அரசு பதவியில் நீடித்தால், அது முன்பை விட அதிக அமெரிக்க எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருக்கும்.
அத்துடன் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஈரான் இன்னும் நெருக்கமான உறவை பேண வாய்ப்புள்ளது. ஈரானின் அதிகார மையங்களை அமெரிக்கா அழித்தாலும், அதே ஆட்சி முறை நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் இழந்த வலிமையை மீண்டும் கட்டியெழுப்பிவிடுவார்கள்.
ஈரானின் மீது தங்களால் இயன்ற அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்தும், அங்கு அடிப்படை ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியாவிட்டால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் அரசியல் எதிர்காலம் குறித்த இந்த அவதானிப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.