பிரித்தானியாவில் LFR கேமராக்களால் சிக்கிய 103 பாலியல் குற்றவாளிகள்
பிரித்தானியாவில் முக அங்கீகார (LFR) கேமராக்கள் பொருத்தப்பட்ட ஒரு சில மாதக் காலப்பகுதியில் நூற்றிற்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.
பிரித்தானியாவில் அக்டோபர் முதல், குரோய்டனில் (Croydon) உள்ள கட்டமைப்புகளில் LFR கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை
இதன்மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை குற்றச்செயல்களின் கீழ் தேடப்பட்டு வரும் 103 குற்றவாளிகள் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 2004 ஆம் ஆண்டு தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பெண் ஒருவரும், கடத்தல் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மெட் லண்டன் தெருக்களில் LFR ஐப் பயன்படுத்தி 1,700க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இனங்காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நேரடி முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த மெட் காவல்துறையின் கொள்கையை “சட்டவிரோதமானது” என்று மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.