லண்டன் நகரில் செல்போன் திருடர்கள் அதிகரிப்பு
மத்திய லண்டனில் மின்சார பைக்கில் பயணம் செய்துகொண்டிருந்த செல்போன் திருடன் ஒருவர், போலீசாரால் திறம்பட மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவரது பெயர் ராக்கி மெக்னமாரா எனத் தெரியவந்துள்ளது.
மெக்னமாரா ஆபத்தான முறையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு போலீஸ் கார் அவரை மோதி நிறுத்த முயற்சித்தது. பைக்கிலிருந்து கீழே விழுந்த அவர், தரையில் குப்புறப் படுத்திருக்கையில், ஒரு டேசர் கருவி அவர் மீது சுட்டிக்காட்டப்பட்டது.
பின்பு, மெக்னமாராவுக்கு விலங்கு பூட்டப்பட்டு, மற்ற போலீஸ் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர். மெக்னமாரா வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, திருடப்பட்ட செல்போன்களை மறைக்கப் பயன்படுத்தப்படும் தகரத் தாள் (tin foil) அதில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, மெக்னமாரா திருட்டுக்குத் தயாராக இருந்தது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, மற்றும் உரிமத்திற்கு இணங்காமல் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.
மேலும் கைதான சந்தேகநபரான மெக்னமாராவுக்கு ஏழு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், அவரது ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யப்பட்ட தடயங்களும் வழங்கப்பட்டன.