சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட அசம்பாவிதம்! மாணவி பலி
சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அன்னவாசல் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் லாவண்யா (வயது 17). அதே பகுதியை சேர்ந்த மணி மகள் கோபிகா (17).
இவர்கள் இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 15-ம் திகதி பாடசாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட இருவரும், விழா முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குறித்த மோட்டார் சைக்கிளை கோபிகா ஓட்டியதாக கூறப்படுகிறது.
3DVY3P
சித்தன்னவாசல் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாணவிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர்.
இதையறிந்த அன்னவாசல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பில் அன்னவாசல் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா இன்று பரிதாபமாக பலியானார்.
அரசு பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.