இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் தங்கம்!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளார். இதையடுத்து அரியானாவில் அவரது சொந்த ஊரிலும் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
அவருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
12 வீரர்கள் பங்கேற்றதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதன்முறையாக 87 மீட்டர் தொலைவும், இரண்டாவது முறையாக 87 புள்ளி ஐந்து எட்டு மீட்டர் தொலைவும் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் மற்றும் ஒரே தங்கப் பதக்கம் இதுவாகும்.
செக் குடியரசின் வீரர்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.