இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தில் சலசலப்பு ; அமெரிக்க தரப்பின் கடும் விமர்சனம்
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்த போதிலும், பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்பிற்கு நேரடியாக அழைப்பு விடுக்காததால் அது இறுதி செய்யப்படவில்லை என லட்னிக் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் விரைந்து செயல்பட்ட வேளையில், இந்தியா காலதாமதம் செய்ததால் ஒப்பந்தம் கைநழுவிப்போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தக் கூற்றை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் மோடியும், ட்ரம்பும் எட்டு முறை தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துவிட்டதாகக் கூறப்படுவதை "உண்மைக்கு மாறானது" என இந்தியா விமர்சித்துள்ளது.
அத்தோடு, ட்ரம்ப் பல நேரங்களில் இருதரப்பு உரையாடல்களை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதாலும், தரவுகளைத் தவறாகச் சித்திரிக்க வாய்ப்பிருப்பதாலும் பிரதமர் மோடி மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% அபராத வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார். இது இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கடந்த ஒக்டோபரில் கூறியிருந்த போதிலும், இந்தியத் தரப்பு அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.