அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கிய இந்திய குடும்பம்; தம்பதி உயிரிழப்பு; பிள்ளைகள் மருத்துவமனையில்
அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண கிஷோர் (45) என்ற மென்பொருள் பொறியியலாளர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவி ஆஷா (40) மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

சம்பவ இடத்தில் பலியான தம்பதி
இந்நிலையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை ( 4) அதிகாலை, இவர்கள் குடும்பத்துடன் சிற்றூந்தில் சென்று கொண்டிருந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக வந்த மற்றொரு வாகனம் அவர்களது சிற்றூந்தின் மீது மோதி விபத்துக்குள்ளனானது.
விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
கிஷோர் தனது குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பே இந்தியாவிலுள்ள தனது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களைச் சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டிலிருந்து திரும்பும் வழியில் டுபாயில் தங்கி புத்தாண்டு கொண்டாட்டங்களையும் முடித்துவிட்டு அமெரிக்கா சென்ற சில நாட்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் அவர்களின் மகன் மற்றும் மகள் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.