கனடா கோர விபத்தில் இந்திய தம்பதி, பேரன் உயிரிழப்புக்கு காரணமான இந்தியர்
கடந்த மாதம் 29 திகதி கனடா - ஒன்டாரியோ , பாமன்வில்லே நகரில் மதுபானக் கடையில் இடம்பெற்ற கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சரக்கு வேனில் செல்வதை அறிந்த போலீசார் அந்த நபரை பிடிப்பதற்காக வாகனத்தில் துரத்தினர்.
அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401-ல் தவறான பாதையில் (ராங் ரூட்) அதிவேகமாக சென்றபோது, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஸ்தலத்தில் பறிபோன உயிர்கள்
இதில், கார் ஒன்றில் பயணித்த இந்திய தம்பதி, அவர்களின் 3 மாத பேரக்குழந்தை மற்றும் சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தையின் பெற்றோரும் அதே காரில் பயணித்த நிலையில் விபத்தில் பலத்த காயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் சீனிவாச பிள்ளை (வயது 60), அவரது மனைவி மகாலட்சுமி (வயது 55), அவர்களின் பேரக்குழந்தை ஆதித்ய விவான் (3 மாத கைக்குழந்தை) என்பதும், குழந்தையின் பெற்றோர் பெயர் கோகுல்நாத் மணிவண்ணன், அஷ்விதா ஜவகர் என்பதும் தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்திய நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கொள்ளையன் ககன்தீப் சிங் (வயது 21) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ககன்தீப் சிங் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜனவரி 15 - பிப்ரவரி 27 காலகட்டத்தில் நடந்த திருட்டு வழக்கில் ககன்தீப் சிங் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஓக்வில்லியில் உள்ள மதுபான கடையில் ஒருவரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் சந்தேக நபரும் ஸ்தலித்தில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளியே வராதபடி வலுவான ஜாமீன் சிஸ்டம் இருக்க வேண்டும் என சில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.