கனடாவில் சந்தேக நபரைத் துரத்திய பொலிசாரால் நான்கு உயிர்கள் பலியான சம்பவம்: சமீபத்திய தகவல்கள்
கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான சம்பவத்தில், பலியானவர்கள் பேரக்குழந்தையைப் பார்க்க கனடா சென்ற இந்திய தம்பதியர் என்றும், அவர்கள் பார்க்கச் சென்ற அந்தக் குழந்தையும் விபத்தில் பலியாகிவிட்டதாகவும், அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை இரவு 8.10 மணியளவில், ஒன்ராறியோவிலுள்ள Clarington என்னுமிடத்தில், மதுபானக்கடை ஒன்றில் ஒருவர் திருட முயல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அந்த நபரைப் பிடிக்க முயல, அவர் வேன் ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளார்.
அவர் தவறான திசையில் செல்ல, பொலிசாரும் அவரை துரத்தியுள்ளார்கள். அப்போது, அந்த வேன், எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதியதில், அந்தக் காரிலிருந்த ஒரு தாத்தா பாட்டியும், அவர்களுடைய பேரப்பிள்ளையான ஒரு கைக்குழந்தையும் பலியானார்கள். வேனை ஓட்டிவந்த அந்த சந்தேக நபரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்நிலையில், பலியானவர்கள், இந்தியாவிலிருந்து தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளையையும் காண கனடாவுக்குச் சென்ற ஒரு தம்பதியர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முறையே 60 மற்றும் 55 வயதுடைய அந்த இந்தியத் தம்பதியரும், அவர்களுடைய பேரனான முன்று மாதக் குழந்தையும் அந்த பயங்கர விபத்தில் பலியாகிவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Update: SIU Releases Further Details in Relation to Fatal Whitby Multi-Vehicle Collision
— Special Investigations Unit (@SIUOntario) May 2, 2024
English: https://t.co/tLPkHpduLF
Francais: https://t.co/Wwx6jmlCgy
குழந்தையின் பெற்றோரான, முறையே 33 மற்றும் 27 வயதுடைய தம்பதியும் அதே காரில் பயணித்துள்ளார்கள். அவர்கள் ஒன்ராறியோவிலுள்ள Ajaxஇல் வாழ்ந்துவந்தவர்கள் என்றும், அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில், அந்தக் குழந்தையின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் முதலான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.