அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 130 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் மருத்துவமனை நடத்தி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைத்தியரொருவர் மருத்துவ காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து மோசடியாக பல கோடி ரூபாய் பெற்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 130 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மருத்துவ மோசடி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி வைத்தியர். இவர் நியூயார்க்கில் 2001 செப்டம்பர் 11ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலின் போது முன்கள பணியாளராக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றி புகழ்பெற்றவர்.
மயக்கவியல் நிபுணரான இவர் பென்சில்வேனியாவில் பல்வேறு இடங்களில் கிளினிக்குகள் நடத்தி வந்துள்ளார். அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையற்ற மருந்து பைகளை விநியோகித்துள்ளார்.
அதற்கான பணத்தை மருத்துவக் காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து பெற்றார். இவ்வாறு 19 கோடி ரூபாயை பெற்று அவற்றை தன் குடும்பத்தினர் கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது தவிர ஆக்ஸிகோடோன் எனப்படும் போதை தரக்கூடிய மருந்துகளையும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து போலீசார் மற்றும் எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு துறையினர் 2019ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் மோசடி நடந்ததற்கான வங்கி பரிவர்த்தனை விபரங்கள் மற்றும் மருந்து சீட்டுகள் கண்டறியப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், வைத்தியரை குற்றவாளி என நேற்று அறிவித்துள்ளது.
தண்டனை விபரம் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என கூறினர். அமெரிக்காவில் மருத்துவ மோசடி, மருந்துகளை தவறாக பயன்படுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சம் 130 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.