இந்தியாவில் 4 இலட்சம் விருந்தினர்களுடன் பிரம்மாண்ட திருமணம்!
இந்தியாவின் ஏழ்மையான மாநிலமாகக் கருதப்படும் பீகாரில், ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவரும், கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளை எதிர்கொள்பவருமான அரசியல்வாதி அனந்த் சிங், தனது மகள் ஷிவாங்கி சிங்கின் திருமணத்தை சுமார் 4 இலட்சம் விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அனந்த் சிங்கின் சொந்த கிராமமான நடவான் பகுதியில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவிற்கு கிராம மக்கள், அரசியல் கூட்டாளிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஆடம்பரத் திருமணங்களுக்கே சவால் விடும் வகையில் இந்த விழாவின் ஏற்பாடுகள் அமைந்திருந்தன.

500 சமையல்காரர்களைக் கொண்ட குழுவினரால் பிரம்மாண்ட சைவ விருந்தும், 5 இலட்சம் (500,000) பாரம்பரிய இனிப்புப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டு விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டதாக அனந்த் சிங்கின் நெருங்கிய உதவியாளர் முன்னா சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் வருகை தருவதற்காக திருமண மண்டபத்திற்கு அருகே 5 ஹெலிபேட்கள் (ஹெலிகாப்டர் இறங்குதளங்கள்) அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஹெலிகாப்டர் தரையிறங்கும் போதும் கிளம்பிய புழுதிப் படலம் அங்கிருந்த பார்வையாளர்களைச் சூழ்ந்தது. மணமகள் சொகுசு பி.எம்.டபிள்யூ (BMW) காரிலும், மணமகன் ரிஷிகேஷ் குமார் சுமார் 200 கார்கள் அணிவகுக்கவும் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தனர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை மற்றும் வாணவேடிக்கைகள் விருந்தினர்களைக் கவர்ந்தன. திருமணத்திற்கு வந்த இலட்சக்கணக்கான மக்களால் அந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி முற்றிலுமாக ஸ்தம்பித்தன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அரசியல்வாதி ஒருவர், தனது காரை வீதியிலேயே விட்டுவிட்டு வயல்வெளிகள் வழியாக டிராக்டரில் பயணம் செய்து திருமண மண்டபத்தைச் சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், திருமணக் கொண்டாட்டத்தை நேரில் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மரங்கள் மற்றும் உயரழுத்த மின்சாரக் கோபுரங்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழாவின் ஒரு பகுதியாக 200 குதிரைகள் பங்கேற்கும் குதிரைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதனைப் பார்ப்பதற்காக சுமார் ஒரு இலட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.