வெளிநாடொன்றில் மதுபோதையில் பஸ்சில் ரகளை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 65 வயதான மூர்த்தி நாகப்பன் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி மதுபோதையில் பஸ்சில் ஏறினார்.
இதன்போது அவர் முக கவசத்தை சரியாக அணியாமல் இருந்ததால் பஸ் டிரைவர் அவரிடம் முறையாக முக கவசம் அணியும் படி அறிவுறுத்தினார். இதனால் கோபமடைந்த மூர்த்தி நாகப்பன் பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளில் திட்டிய நிலையில் சக பயணிகள் அதை தட்டிக்கேட்டபோது அவர்களையும் கொச்சையாக திட்டி தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து பஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் மூர்த்தி நாகப்பனை பொலிசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூர்த்தி நாகப்பன் இதற்கு முன்னரும் 2 முறை இதே போல் மது போதையில் பஸ்சில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது மூர்த்தி நாகப்பன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்ததுடன் , அவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனையும் விதித்தார்.