அமெரிக்காவில் வேலை இல்லை; கண்ணீருடன் வெளியேறிய இந்திய பெண்
அமெரிக்காவில் பல மாதங்களாக வேலை தேடியும், வேலையை பெற முடியாததால், இந்திய பெண் அனன்யா ஜோஷி, கண்ணீருடன் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.
வடமேற்கு பல்கலைக்கழகத்தில் 2024 ஆம் ஆண்டு உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஜோஷி, ஒரு உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்பில் பணிபுரிந்து வந்தார்.
என் பயணத்திலேயே கடினமான படி இதுதான்
சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது ஒரு மாத கால அவகாசத்திற்குள் வேறு வேலையை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
வேலை தேடும் தனது பயணத்தை தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆவணப்படுத்தி வந்த ஜோஷிக்கு, அவர் எடுத்த தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 29 அன்று, அமெரிக்காவை விட்டு புறப்படும் வீடியோவை அவர் வெளியிட்டார். அந்த பதிவில்,
"இதுவரை என் பயணத்திலேயே கடினமான படி இதுதான். என் உண்மை நிலையை நான் ஏற்றுக்கொண்டாலும், இந்த நாளுக்காக நான் தயாராகவில்லை,"என்று அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
ஒரு பொருளாதார ரீதியாக சுதந்திரமான வயது வந்தவராக தனக்கு முதல் வீடாக இருந்தது அமெரிக்காதான் என்றும், தனக்குக் கிடைத்த அனுபவங்களுக்காக நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.