இந்தோனேசிய நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை அதிகாலை 7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால், மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும் திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.