சுட்டுவீழ்த்தப்பட்ட சீன பலூன் தொடர்பில் அமெரிக்கா பகீர் தகவல்!
அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் , அது ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடா ஊடாக அமெரிக்க வான் பரப்புக்குள் கடந்த வாரம் புகுந்த மேற்படி பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
எனினும், அது காலநிலை ஆய்வு உட்பட சிவில் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பலூன் எனவும் கடும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு அமெரிக்காவுக்குள் புகுந்ததாகவும் சீனா தெரிவித்தது.
இந்த பலூன் அமெரிக்கப் பெருநிலப்பரப்பை கடந்து சென்று, கடந்த சனிக்கிழமை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனையடுத்து சுட்டுவீழ்த்தப்பட்ட பலூனின் சிதைவுகளை மீட்டு, ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் வட பிராந்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி ஜெனரல் கிளென் வான்ஹேர்க் இது தொடர்பாக கூறுகையில்,
இந்த பலூன் 200 அடி (60 மீற்றர்) உயரமானதுடன், பல்லாயிரம் இறாத்தல் பொருட்களை, அதாவது ஒரு ஜெட் விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்துசெல்லக்கூடியது எனவும் கூறியுள்ளார்.
பலூனின் சிதைவுகளை சீனாவிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார்.
இதேவேளை, பலூன் சுட்டு வீழ்த்தப்பட்மைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.