கனடாவில் 70,000 டொலர் பெறுமதியான 'போகிமொன்' கார்டுகள் கொள்ளை!
கனடாவின் வின்னிபெக் நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 70,000 கனடிய டொலர்கள் மதிப்பிலான 'போகிமொன்' சேகரிப்பு கார்டுகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'முல்வே மார்க்கெட்' என்ற கடையின் உரிமையாளரான கெனான் ஹைசேனி என்பவரது கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வார இறுதியில் நடைபெற்ற போகிமொன் கார்டுகள் பரிமாற்ற நிகழ்வு முடிவடைந்ததும், நபர் ஓரவர் ரகசியமாகக் கடைக்குள் புகுந்து மறைந்திருந்துள்ளார்.

ஊழியர்கள் அனைவரும் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற பிறகு, நள்ளிரவில் கார்டுகளைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளார்.
நள்ளிரவு 12 மணிக்குக் கடையில் பாதுகாப்பு அலாரம் ஒலித்ததையடுத்து, சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, திருடன் ஒருவன் பெரிய நீல நிறப் பையுடன் தப்பிச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
திருடப்பட்ட பெட்டிகள் மற்றும் தனிப்பட்ட கார்டுகளின் மதிப்பு $3,000 முதல் 5,000 டொலர்கள் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் போகிமொன் கார்டுகள் கொள்ளையடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. வின்னிபெக் நகரில் உள்ள மற்றொரு பொம்மை கடையில் அண்மையில் 6,000 டொலர் மதிப்பிலான கார்டுகள் திருடப்பட்டன.
மேலும், வன்கூவர், நனைமோ, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான போகிமொன் கார்டுகள் அடுத்தடுத்துக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வன்கூவரில் நடந்த ஒரு திருட்டில் 19,000 டொலர் மதிப்பிலான ஒரே ஒரு அரிய கார்டு உட்பட மொத்தம் 80,000 டொலர் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன.
அண்மைக்காலமாக போகிமொன் சேகரிப்பு கார்டுகளின் சந்தை மதிப்பு சர்வதேச அளவில் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இணையதளங்கள் மூலமாகத் திருடப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்கக் கடுமையான கண்காணிப்பு விதிகளைக் கொண்டுவர வேண்டும் என கனடிய சில்லறை வர்த்தக சபை அரசை வலியுறுத்தியுள்ளது.