சர்வதேச விண்வெளி நிலையம் கடலிலோ நிலத்திலோ வந்து விழும் ; உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 17-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன.
அதேசமயம் அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தியதுடன், பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன.
அத்துடன் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷியாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
#BREAKING Russia warns sanctions could cause ISS to crash: official pic.twitter.com/dYTZTYd8kQ
— AFP News Agency (@AFP) March 12, 2022
இதுகுறித்து ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின் கூறுகையில்,
“இந்த பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷிய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும்.
இதன் விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷிய பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்" என்று கூறியுள்ளார்.