ஈரானின் முக்கிய தீர்மானம் ; உலக மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மதிப்பளித்து, இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சரின் அப்பாஸ் அரக்சி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்காப்பு நடவடிக்கை
பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அயராது உழைத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானின் ஆயுதப் படைகள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டம் மற்றும் ஈரானின் 10 அம்சத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் அப்பாஸ் அரக்சி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.