சவூதி அரேபியா கப்பல் மீது ஈரான் தாக்குதல்; மாலுமிகள் இருவர் பலி;கடும் கண்டனம்
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓமானின் முசந்தம் தீபகற்பத்திற்கு வடக்கே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கடற்படை பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காத ஈரான்
தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சவூதியின் 'பஹ்ரி' (Bahri) கப்பல் போக்குவரத்து நிறுவனம், உயிரிழந்த பிலிப்பைன்ஸ் மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தென்கொரியாவுக்குச் சொந்தமான மற்றொரு எண்ணெய்க் கப்பலும் இதே பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் நேரடியாகப் பதிலளிக்காத போதிலும், அனுமதி பெறப்படாத கடல் வழியைப் பயன்படுத்திய இரு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதித் தீப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈரானியப் படைகள் அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவம் ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரிக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்கா போர்க் குற்றம் புரிந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.