ஈரான் தலைவர் ஒரே இடத்தில் தூங்குவது ஆபத்து; ட்ரம்ப் எச்சரிக்கையால் பதற்றம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ஒரே இடத்தில் தூங்குவது ஆபத்து என எச்சரிக்கை விடுத்துள்ளாமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானியத் தலைவரின் இருப்பிடம் குறித்த துல்லியமான உளவுத் தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை நேரலையில் கூட வெளிப்படுத்த முடியும் என்றும் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.

நான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தால்....
அதுமட்டுமல்லாது "நான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் தூங்குவதற்கு பயப்படுவேன்" என்ற டிரம்ப் கூறியுள்ளமை சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஈரானில் அண்மையில் நடைபெற்ற உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என கூறும் டிரம்ப் , அதுவே அந்த நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என்றும் கூறி வருகிறார்.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டுத் தலைவர் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது அமெரிக்காவிற்கு எதிரான முழு அளவிலான போரின் அறிவிப்பாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளமை உலகில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ ரீதியாகப் பார்த்தால், அமெரிக்கா தனது இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) கப்பலை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலுடன் இது இணைய உள்ளது. ஈரானுடன் ஒரு நியாயமான அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை இந்த நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஈரான் உடனடியாகத் தனது அணுசக்தி திட்டங்களை நிறுத்த வேண்டும் என வாஷிங்டன் வலியுறுத்தி வருகிறது.
பொருளாதார ரீதியாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஈரானின் 80 சதவீத எண்ணெய் விற்பனையைக் கொண்டுள்ள சீனாவுடனான வர்த்தகத்தைத் தடுக்க ட்ரம்ப் புதிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதேவேளை ஜெனிவாவில் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், மறுபுறம் ட்ரம்ப்பின் இந்தத் தனிப்பட்ட தாக்குதல் மற்றும் இராணுவ மிரட்டல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுன.