பிரிட்டன் விமானப்படைத் தளம் தொடர்பான சதித் திட்டம்: ஈரான் மீண்டும் மறுப்பு
பிரிட்டனின் ராப் பயாபோர்ட் விமானப்படைத் தளத்திற்கு அருகில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பயங்கரவாதச் சதித் திட்டத்தில் ஈரானுக்குத் தொடர்பில்லை என அந்நாடு மீண்டும் மறுத்துள்ளது.
பிரிட்டனுக்கான ஈரான் தூதுவர் அலி மௌசவி, இந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், விசாரணைகளில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தெஹ்ரான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமைச்சர் ஸ்டீபன் டௌட்டியைச் சந்தித்தபோது, ஈரானின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை மௌசவி மீண்டும் நிராகரித்தார்.

ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் பிரிட்டன் தரப்பிடம் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும், கடந்த செப்டெம்பர் மாதம், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஈரான் தூதரகம், அவற்றை “ஈரானுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம்” என விமர்சித்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றச்சாட்டுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.