அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து கூட்டமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!
எதிர்வரும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரான் ரசிகர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில், தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட் ஒதுக்கீட்டை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஈரான் கால்பந்து கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தீவிர ராஜதந்திரப் போர் மற்றும் அண்மைய இராணுவ மோதல்களின் நிழலில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஈரான் கூட்டமைப்பு கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிகளின்படி, ஒவ்வொரு போட்டிக்கும் பங்கேற்கும் நாடுகளின் கூட்டமைப்பிற்கு 8 சதவீத டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.
ஆனால், எதிர்பாராத மற்றும் அதிரடி நடவடிக்கையாக, ஈரான் கால்பந்து கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட டிக்கெட் ஒதுக்கீட்டை அமெரிக்கா திடீரென திரும்பப் பெற்றுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தேசிய அணியின் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டைக் கூட வழங்க முடியாத நிலைக்கு எங்கள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறவிருந்த நியூசிலாந்து, பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு எதிரான ஈரானின் லீக் சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஈரான் ஏற்கனவே தொடங்கியிருந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை நம்பி பல ரசிகர்கள் தங்களின் பயண ஏற்பாடுகளையும், தங்குமிட வசதிகளையும் செய்திருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்களைச் சதி செய்து முடக்கும் செயல் என ஈரான் நிர்வாகம் சாடியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் அணுசக்தி திட்ட அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தின.
இதனால் இரு நாடுகளும் தற்போது போர் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இதன் காரணமாக, உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரானுக்குப் பல்வேறு நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளை அமெரிக்கா விதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஈரானிய அணியின் தொழில்நுட்ப மற்றும் உதவிப் பணியாளர்கள் பலருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச போட்டிகளை ஆளுகின்ற நெறிமுறைகளுக்கும், பங்கேற்கும் நாடுகளுக்கு இடையிலான சமத்துவக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானது என ஈரான் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஃபிஃபா (FIFA) தலையிட்டு, அரசியல் தலையீடற்ற நடுநிலைமை மற்றும் நியாயமான விதிகளின்படி ஈரானிய ரசிகர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என ஈரான் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.