ஈரானை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள் ; சுரங்கத்தில் பதுங்கினார் கமேனி
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதை கண்டித்து, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தன. ஈரானில் பொதுமக்கள் நடத்தி வரும் போராடடத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.
போராட்டத்தை முடக்கக்கூடாது என்று அமெரிக்கா கூறி உள்ளதோடு, மீறினால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஈரானை தாக்கவும் தயங்க மாட்டோம் என்று அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்தார்.
ட்ரம்பின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து, போர்க்கப்பல்கள், போர் விமானங்களை ஈரானை சுற்றியுள்ள இடங்களில் அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அதீத மிரட்டல் எதிரொலியாக, ஈரான் மீது எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில் அந்நாட்டு ஆட்சியாளர் மதகுரு கமேனி பாதுகாப்பு கருதி சுரங்கத்திற்குள் பதுங்கி உள்ளார்.
அவரின் 3வது மகன் மசூத் கமேனி தற்போது ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
அமெரிக்காவின் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் ஈரானில் இண்டர்நெட் வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று குற்றம்சாட்டி இஸ்ரேல் ஈரானை தாக்கியது.
அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அதிரடியாக தாக்கியது. அப்போதும் கமேனி சுரங்கம் ஒன்றில் பாதுகாப்பாக பதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.