அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டது – ஈரான்
அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியையும் அமெரிக்கா மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் அதிகாரிகள் முறைப்படுத்திய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக ஒரு "இணைப் பாதையை" பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்துவதாக பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் எப்போதும் போரை விரும்பியதில்லை என்றும், தங்களின் மீது "திணிக்கப்பட்ட" போரில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே ஈரான் முயன்றுள்ளது என்றும் பாகேய் கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் வழங்கியிருந்த உறுதிமொழிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.