ஈரானின் பாதுகாப்பு தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதற்குப் பதிலடியாக எதிரிகளின் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் இலக்காகக் கொள்ளும் திறன் ஈரானுக்கு இருப்பதாக அந்நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
ஈரானின் உயர் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான ரெசாயி, அமெரிக்கச் செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விலை உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேவையான கருவிகள் ஈரானிடம் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றைத் தாக்குவதற்குரிய இலக்குகளாகக் கருத முடியாது.
ஆனால், அதேவேளை போருக்கு ஆதரவளிக்கும் மறுதரப்பின் பொருளாதாரக் கட்டமைப்புகள் என்றென்றும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதுவதும் சாத்தியமில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், அரசியல் நல்லெண்ணத்தை மட்டுமே உத்தரவாதமாகக் கொண்ட ஒப்பந்தங்களில் தெஹ்ரான் இனி ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைப் பொறுத்தே நீரிணையைத் திறப்பது அமையும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், பிராந்திய நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் ரெசாயி தெரிவித்துள்ளார்.
எரிசக்தி நிலையங்கள், கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் ஆகியவை போரில் இருந்து பரஸ்பரம் விலக்கி வைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்குவதே சிறந்த மாற்றுவழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.