அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட ஈரானிய கப்பல் ; சீனாவிடமிருந்து வந்த தகவல்
அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட ஈரானிய மதுபான கப்பலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இது குறித்துக் கூறுகையில், "அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பல் சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தது.

அதில் ஏவுகணைத் தயாரிப்புக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் இருந்தன. இராணுவத்தின் உத்தரவுகளை மீறிச் சென்ற அந்தக் கப்பல், ஈரானின் ஆட்சிக்குச் சீனா முட்டுக்கொடுப்பதையே காட்டுகிறது.
இது மறைக்க முடியாத உண்மை," எனச் சாடியிருந்தார். நிக்கி ஹாலேயின் இந்தக் குற்றச்சாட்டைச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அவர் இது குறித்துக் கூறுகையில்: "எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அது ஒரு வெளிநாட்டுக் கொடி ஏந்திய சாதாரண மதுபானக் கப்பல் மட்டுமே.
இச்சம்பவத்தில் சீனாவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவது தீய உள்நோக்கம் கொண்டது.ஆதாரமற்ற இத்தகைய மிகைப்படுத்தல்களைச் சீனா வன்மையாக எதிர்க்கிறது."