பயோ வெப்பனா? ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதறியடித்து ஓடிய ரஷ்யா!
உக்ரைன் போர் அணு ஆயுத போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் திடீரென உக்ரைன் பயோ ஆயுதங்களை வைத்து தங்களை அழிக்க முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் அமெரிக்கா ஆதரவுடன் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து புகார் வைத்து வருகிறது. பயோ ஆயுதங்கள் என்பது சர்வதேச போர் முறைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
அதாவது ஒரு நாட்டின் மீது நேரடியாக ஆயுதங்களை வைத்து போர் தொடுக்காமல், நோய்களை பரவ செய்து போர் தொடுக்கும் முறைகள் பல தோன்றிவிட்டன. அதேசமயம் கொரோனா கூட சீனாவின் பயோ வார் என்றுதான் தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ரஷ்ய எல்லையில் இருக்கும் உக்ரைன் நகரங்களில் சில ஆராய்ச்சி மையங்களை உக்ரைன் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்டகன் உதவியுடன், அவர்களின் நிதியோடு இந்த ஆராய்ச்சியை உக்ரைன் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
இங்கு மறைமுகமாக பரவ கூடிய, வேகமாக பரவ கூடிய, பல மரணங்களை ஏற்படுத்த கூடிய வைரஸ்கள் பற்றி ஆராய்ச்சி நடக்கிறதாம். இதை பற்றி ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பில்,
ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் விதமாக இந்த வைரஸ்கள் மீது உக்ரைனில் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. பறவைகள், வெளவால்கள், பல்வேறு வைரஸ்களை கொண்ட விலங்குகளில் ஆராய்ச்சி செய்து, அதில் இருந்து வைரஸ்களை எடுத்து இவர்கள் பரப்புவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் என ரஷ்யா கூறி உள்ளது.
அத்தோடு அங்கு கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்யப்படுவதாகவும், அதேபோல் ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட மற்ற பல நோய்களை கொண்டு மாற்றி, இன்னும் கொடுமையானதாக உருமாற்றி அதை பரப்ப உக்ரைன் - அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
எனினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டினை அமெரிக்கா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் மறுத்துவிட்டது. அத்துடன் உக்ரைனில் அப்படி பயோ ஆயுதங்கள் இல்லை. ரஷ்யாதான் பயோ தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது என்று பதில் புகார் வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் பயோ ஆயுதங்கள் குறித்து ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அவசர சந்திப்பை நடத்த வேண்டும் என்றும் ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் இன்று இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.