மியான்மாரில் முடிவுக்கு வருகிறதா இராணுவ ஆட்சி? பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு
மியான்மாரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் 4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மாரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மியான்மாரின் இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என மியான்மார் அரச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இராணுவ அரசு
மியான்மாரின் இராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரச முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மாரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் மியான்மார் இராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து இராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, இராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.