புத்தாண்டில் அமெரிக்காவை தாக்க திட்டமிட்ட ISIS இளைஞன்; FBI வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா (North Carolina) மாகாணத்தில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக புத்தாண்டு அன்று தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இளைஞன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI) தெரிவித்தது.

நடத்தப்படவிருந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பினால் நடத்தப்படவிருந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக “ஐஎஸ்ஐஎஸ்” தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்ட இளைஞனால் திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர், வர்த்தக நிலையம் மற்றும் உணவகத்தில் மக்கள்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. புத்தாண்டுத் தாக்குதல் 2026' (The New Years Attack 2026) என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆவணத்தில், எவ்வளவு அதிகமான மக்களைக் கத்தியால் குத்த முடியுமோ அவ்வளவு பேரைக் கொல்ல வேண்டும் என்ற இலக்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
LGBTQ சமூகத்தினர், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அவரது வீட்டில் இருந்து சுத்தியல்கள், கத்திகள், தற்காப்பு கையுறைகள் (tactical gloves) மற்றும் கவசம் (vest) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு வழங்க முயன்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.