அமெரிக்காவில் இடம்பெறவிருந்த இஸ்லாமிய மாநாடு ரத்து
அமெரிக்காவின் தெற்கு ப்ளோரிடா மேரியட் ஹோட்டலில் நடக்கவிருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை அந்த இஸ்லாமிய அமைப்பு ஊக்குவிப்பதாக போராட்டக்காரர்களின் 100-க்கும் அதிகமான அழைப்புகள் ஹோட்டல் நிர்வாகத்துக்கு கிடைத்த நிலையில் குறித்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியான தெற்கு ப்ளோரிடா இஸ்லாமிய அமைப்பு நடத்தவிருந்த இந்த மாநாட்டில் ஆயிரம் பேர் கலந்து கொள்ளவிருந்தனர்.
இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவர் சமீர் கக்லி கூறுகையில், மேரியட் ஹோட்டலின் இந்த முடிவு தெற்கு ப்ளோரிடாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் பெரியளவிலான திருமண நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் அந்த ஹோட்டலில் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் பாதுகாப்பு தொடர்பான புகார் ஹோட்டல் தரப்பில் எழுவதற்கு முன்பே நகரத்தின் காவல்துறையையும் தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ப்ளோரிடா காவல்துறை தெரிவிக்கையில், நிகழ்வு முழுமைக்கும் காவல்துறையால் பாதுகாப்பு உறுதி அளித்திட இயலும் என சொல்ல இயலாது. இருந்தபோதும் நிகழ்வை ரத்து செய்தது முழுக்கவே ஹோட்டல் நிர்வாகத்தின் முடிவு எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவரும் காஃப்மேன், “அங்கு பேச வருபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை. அமைப்பு மற்றும் அதன் தலைமை மீதே எங்களுக்கு விமர்சனம் உள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.