கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இஸ்லாமிய குடும்பம்: பலியானவர்கள் குறித்த விவரங்கள் வெளியானது
கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இஸ்லாமிய குடும்பத்தில், பலியானவர்கள் குறித்த விவரங்கள் வெளியானது கனடாவின் ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் நடந்த ஒரு துயர சம்பவத்தில், ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 74 வயது பாட்டி, 46 வயது கணவர், 44 வயது மனைவி, அவர்களது மகளான 15 வயது பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் அந்த தம்பதியரின் மகனான 9 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
14 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து கனடா வந்த அந்த குடும்பத்தினர் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் மீது வேண்டுமென்றே ட்ரக் ஒன்றைக் கொண்டு மோதியுள்ளார் Nathaniel Veltman (20) என்னும் கனேடியர்.
கைது செய்யப்பட்ட Nathaniel நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர் Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), அவர் ஒரு பொறியாளர். தம்பதியரின் மகள் பெயர் Yumna Salman (15). இவர்களுடன் 74 வயதாகும் Afzaalஇன் தாயும் கொல்லப்பட்டுள்ளார்.
தம்பதியரின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது உடல் நலம் முன்னேறி வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் ட்ரூடோ, அவன் விரைவில் முழுமையாக நலமடைவான் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.