காசாவில் மருத்துவமனைகளை முற்றுகையிடும் இஸ்ரேல்
இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் (24) காசாவில் உள்ள மேலும் இரண்டு மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பலத்த துப்பாக்கிச் சூட்டின் கீழ் மருத்துவக் குழுக்களைப் பின்தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, காசாவின் முக்கிய அல் ஷிஃபா மருத்துவமனையில் தொடர்ச்சியான மோதல்களில் 480 ஹமாஸ் போராளிகளைக் சிறைபிடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேவேளை, ஐந்து மாதங்களுக்கும் மேலாக போர் மூளும் பலஸ்தீனப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் போராளிகள் தளங்களாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அது தொடர்பான புகைப்படங்களையும் காணொளிகளையும் வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனையை சுற்றி இஸ்ரேலியப் படைகள் செயல்படத் தொடங்கியதையடுத்து அப்பகுதியில் ஹமாஸ் போராளிகள் சிவில் உள்கட்டமைப்பை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இஸ்ரேல் கண்டறிந்துள்ளது.